அமெரிக்க- சீன வர்த்தகப்போரால் ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் பொருளியலைக் கொண்டுள்ள மலேசியா, அனைத்துலக வர்த்தகத் தடைகளால் பாதிக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவின்மீது விதிக்கப்படக்கூடிய வர்த்தகத் தடைகளுக்கு யார் காரணம் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆயினும், தடையற்ற வர்த்தகக் கொள்கைகளைப் பரப்புபவர்களாக இருந்தவர்கள் இப்போது கட்டுப்பாடுகள் நிறைந்த வர்த்தகச் செயல்முறைகளை இன்னும் பெரிதளவில் பின்பற்றுவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப்போரைப் பற்றிப் பேசிய டாக்டர் மகாதீர், "துரதிஷ்டவசமாக இந்தப் பிரச்சினையில் நாங்கள் சிக்கியுள்ளோம்," எனக் கூறினார்.
மலேசியாவின் ஏற்றுமதிகளுக்கான மூன்று ஆகப் பெரிய வாடிக்கையாளர்களாக அமெரிக்காவும் சீனாவும் அடங்கியுள்ளன.
இந்த இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் தாக்கத்தைக் குறைக்க மலேசியா, தனது வட்டார நாடுகளுடன் அதிகம் கூட்டு முயற்சிகளில் இணையும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

