மலேசியா மீது வர்த்தகத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது எச்சரித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய திரு மகாதீர், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடரும் வர்த்தக மோதலால், அதிகரித்துவரும் தன்னைப் பேணித்தனப் போக்கு, ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளியலைப் பாதிக்கலாம் என்றார்.
மலேசியா மீது வர்த்தகத் தடைகளை விதிக்கக்கூடிய நாடுகள் குறித்து டாக்டர் மகாதீர் குறிப்பிடவில்லை.
ஆனால் தடையற்ற வர்த்தகத்தை ஆதரிப்போர், இப்போது பிரம்மாண்டமான அளவில், வர்த்தக நடைமுறைகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்க-சீன வர்த்தகப் போரில், இடையே சாதகமற்ற ஒரு நிலையில் மலேசியா மாட்டிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இருநாட்டு சந்தைகளுக்கும் எங்களுக்கும் பொருளியல் ரீதியாக தொடர்பு உள்ளது.
"இயற்கையான புவியியல் அமைப்பிலும் நாங்கள் இடையே மாட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். இதனால் நாங்களும் வர்த்தகத் தடைகளுக்கு ஆளாவோம் என்ற பேச்சு எழுகிறது," என்றார்.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை, மலேசியா பெருமளவில் ஏற்றுமதி செய்யும் சந்தைகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் நிலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சீனாவும், அமெரிக்காவும் உள்ளன.
வல்லரசுகளின் மோதலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள, மலேசியா அதன் வட்டார நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதாக திரு மகாதீர் சுட்டினார்.
வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கும் மலேசியா ஆளாகியுள்ளது என்று நிகழ்வில் பகிர்ந்துகொண்டார் டாக்டர் மகாதீர், மலேசியாவின் செம்பனை எண்ணெய் வேளாண்மைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் எழுப்பியுள்ள பிரசாரத்தைக் குறிப்பிட்டார்.
"இந்நாடுகள் தங்களின் காடுகளைப் பெரும்பாலும் அழித்து வருவதுடன் நச்சு வெளியேறும் அளவைக் குறைக்கவும் மறுக்கின்றன. ஆனால் வசிப்பிடத்திற்காகவும் பிழைப்புக்காகவும் காடுகளை நாங்கள் அழிப்பதைத் தடுத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள்," என்றார் அவர்.
காடழிப்பு தொடர்பாக எழுந்த அக்கறைகளைக் கருதிச் செம்பனை எண்ணெய்யை 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கும் தன்மையுடைய எரிபொருள் பட்டியலிலிருந்து ரத்து செய்வதை இவ்வாண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சட்டமாக்கியது.

