கூர்கா அதிகாரி ஆனார் பிரபல 'மிஸ்டர் பீன்'னின் புதல்வன்

கூர்கா அதிகாரி ஆனார் பிரபல 'மிஸ்டர் பீன்'னின் புதல்வன்

2 mins read
ad09cbae-0261-441b-8e5f-387c727864e9
கூர்கா அதிகாரியான பென் அட்கின்சன். படம்: இணையம் -

பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை கலைஞரும் நடிகருமான ரோவன் அட்கின்சன், தம் 'மிஸ்டர் பீன்' கதாபாத்திரத்திற்குப் பெயர் போனவர்.

இவரின் மகன் பென் அட்கின்சன், 26, அண்மையில் மூன்று மாதங்களாக நேப்பாளத்தில் பயிற்சி பெற்று இப்போது ஒரு கூர்கா அதிகாரி ஆகியுள்ளார்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் சிறப்பு அணியின் படைத் தளபதியாகச் சேவையாற்றிய லெப்டினண்ட் பென், கூர்கா படையில் சேர்வதற்கு நேப்பாள மொழியை அந்த மூன்று மாதங்களில் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அத்துடன் பத்து வாரப் பயிற்சி மூலம் கூர்கா கலாசாரம் பற்றி கற்றுக்கொண்டார். பிரிட்டிஷ் ராணுவத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்புப் பிரிவாக இருந்து வருகிறது இந்த கூர்கா படை.

இதற்கிடையே லெப்டினண்ட் அட்கின்சன் மொழியை அதிவேகத்தில் கரைத்துக் குடித்ததாக கூர்கா பிரிகேட் சங்கம் அதன் செய்திமடலில் வெளியிட்டிருந்தது.

இதற்குமுன் அரேபிய, ஸ்பானிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர் என்பதால் எளிதில் நேப்பாள மொழியை அவர் கற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

64 வயது ரோவன் அட்கின்சனுக்கும் 62 வயது சுனேத்ரா சாஸ்த்ரிக்கும் பிறந்தவர் பென் அட்கின்சன்.

சென்ற ஆண்டு பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயும் நடத்திய சந்திப்பில் மரியாதை அணிவகுப்பை வழிநடத்திய பெருமையும் பென் அட்கின்சனைச் சேரும்.

கூர்கா அதிகாரியாவது உலகிலேயே மிகச் சிரமமான ஒன்று என்று கூறப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் கூர்கா அதிகாரிக்கான 200 இடங்களுக்காக கிட்டத்தட்ட 28,000 பேர் போட்டியிடுவார்களாம்.