கோலாலம்பூர்: மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் அரசைக் கவிழ்க்கும் முயற்சியின் பின்னணியில் முன்னாள் பிரதமர் நஜிப் சந்திக்கும் எஸ்ஆர்சி வழக்கு உள்ளதாக மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் தந்தையுமான திரு லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகராகவும் இருக்கும் இவர், முன்புபோல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது என்ற நிலை உள்ளதால் அம்னோ, பாஸ் கட்சியினர் புதுவழிகளில் அரசை எப்படியாவது கவிழ்க்க ேவண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
"அவர்களின் இந்த அவசரத்திற்கு காரணம் எஸ்ஆர்சி வழக்கு நவம்பர் மாதம் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதே. அன்றுதான் திரு நஜிப்பின் மீதான ஊழல் வழக்கில், அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதால் அவர் தனது தற்காப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறலாம் அல்லது வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அவர் விடுவிக்கப்படலாம். அரசு தரப்பு வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்ய நவம்பர் 11ஆம் தேதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது," என்று திரு லிம் விளக்கினார்.
பக்கத்தான் ஹரப்பான் அரசிலிருந்து ஜனநாயக செயல் கட்சியையும் அமானா நெகரா கட்சியையும் நீக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று எழுந்த புகார்கள் தொடர்பில் திரு லிம் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய திரு லிம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜனநாயக செயல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதும் பக்கத்தான் ஹரப்பான் அரசுக்கு எதிரான தாக்குதல்களின் ஒரு பகுதியே என்றும் திரு லிம் விவரித்தார். கடந்த 54 ஆண்டுகளாக தமக்கு எதிராக கூறப்படும் பொய்யுரையின் தொடர்ச்சியே தமது கட்சி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற கூற்று என அவர் மேலும் தெரிவித்தார்.
"நஜிப் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் இறுதி முடிவு நெருங்கிவிட்டதால் அவர்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள்," என்றும் திரு லிம் கூறினார்.

