பெய்ருட்: மத்திய கிழக்கு நாடான லெபனானில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் சாஆட் ஹரிரி தற்பொழுது பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
லெபனானில் ஊழலுக்கும், அதிகார வர்க்கத்துடன் தொடர்பு வைத்திருப்போர் பலன் பெறுவதற்கும் எதிராக கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்த சீர்திருத்தங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு பல நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக பல நாட்டு அதிபர்கள் பதவியிழந்தனர்.
லெபனானில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை ஏற்றுள்ள ஹரிரி, அடுத்த 72 மணிநேரங்களுக்குள் சீர்திருத்தங்களுக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.
இல்லையேல் தாம் பதவி விலகப் போவதாகவும் மிரட்டியுள்ளார். லெபனானில் தாம் மேற்கொள்ள உள்ள பொருளியல் சீர்திருத்தங்கள் ஏற்கப்பட்டால் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் உறுதி அளித்துள்ள 11 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள நிதியுதவி நாட்டுக்குக் கிடைக்கும் என்று கூறிய திரு ஹரிரி, சீர்திருத்தங்களுக்கு எதிராக தமது அரசியல் எதிரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
தற்போதைய, முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 50% வெட்டுடன் அரசு அதிகாரிகள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் நிதியுதவியும் குைறக்கப்படும்.
அத்துடன், லெபனானின் மத்திய வங்கி, மற்ற தனியார் வங்கிகள் ஆகியவை நாட்டு வரவு, செலவு திட்டத்தில் துண்டு விழாமலிருக்க 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவது, தொலைத் தொடர்பு துறையை தனியார்மயமாக்குவது, மின்சாரத் துறையை சீரமைப்பது ஆகியவையும் அடங்கும்.
இந்த சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக ஹரிரியின் அமைச்சரவை கூடி விவாதிக்கும் என்று கூறப்படுகிறது.

