அன்வார் கேலி: அஸ்மினின் பின்புலம் அனைவரும் அறிந்ததே

அன்வார் கேலி: அஸ்மினின் பின்புலம் அனைவரும் அறிந்ததே

1 mins read
22b51aff-9522-4fc7-9bb3-08ebee2286dc
-

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தனது முழு தவணையை முடிப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும் என்று பக்கத்தான் கெஅடிலான் ராக்யாட்டின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார். ஆயினும், கெஅடிலான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் திரு அஸ்மினின் கூற்றை மட்டுப்படுத்தியுள்ளார்.

"பதவி ஒப்படைப்புக்குக் குறிப்பான தேதியைக் கொண்ட ஒப்பந்தம் ஏதேனும் இருக்கிறதா என்று அறிவிக்க, யாராக இருந்தாலும் அவருக்கு நான் சவால் விடுகிறேன். அப்படி எதுவும் இல்லை" என்று பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் உள்ள திரு அஸ்மின் கூறினார்.

பக்கத்தான் ஹரப்பான் எடுத்த முடிவு தேதியின் அடிப்படையிலானது அல்ல என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தலைமைத்துவ மாற்றத்திற்காக ஏங்கும் சிலர், பின்வழியில் அரசாங்கத்தை அமைக்க முயல்வதாகத் திரு அஸ்மின் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய தலைமைத்துவ மாற்றத்தால் மேலும் பிரச்சினை ஏற்பட்டு, முதலீட்டாளர்களிடையில் தன்னம்பிக்கை குறைந்துவிடும் என்றும் திரு அஸ்மின் கூறினார்.

ஆயினும், இது குறித்து கேட்கப்பட்ட திரு அன்வார் "பரவாயில்லை. அவரது (அஸ்மினின் பின்புலம் அனைவரும் அறிந்ததே" என்று கேலியாகக் கூறினார். மலேசியா நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடு என்பதால் பிரதமரை ஆளும் கட்சிதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று திரு அன்வார் கூறினார். "இதனால் நான் இந்த விவகாரத்தை பக்கத்தான் ஹரப்பான் மன்றத்திடம் விட்டுவிடுகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.