குளிர்பதன லாரியில் அடைக்கப்பட்டு மாண்ட 39 பேர்; சூடுபிடிக்கும் விசாரணை

குளிர்பதன லாரியில் அடைக்கப்பட்டு மாண்ட 39 பேர்; சூடுபிடிக்கும் விசாரணை

1 mins read
97b0aac8-7aca-4d6c-9160-c103c0f93e30
-

பிரிட்டனில் டிராக்டர்-லாரி ஒன்றுக்குள் 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் அந்நாட்டு போலிசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். தென்கிழக்கு இங்கிலாந்தில் காணப்பட்ட அந்த லாரியின் 25 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 பெரியவர்களும் பதின்ம வயதில் இருக்கும் ஒருவரும் மத்திய லண்டனிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள எசெக்ஸ் பகுதியிலுள்ள தொழிற்பேட்டை ஒன்றில் சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்தக் குளிர்பதன லாரியில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது என்பதன் தொடர்பில் போலிசார் எந்த அனுமானமும் தெரிவிக்கவில்லை. ஆயினும், ஆள் கடத்தலுக்கான அறிகுறிகள் சம்பவ இடத்தில் தென்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் கூறுகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பதாக எசெக்ஸின் தலைமை சூப்பரின்டென்டன்ட் ஆண்ட்ரூ மரினர் தெரிவித்தார்.

"பலர் உயிரிழந்திருக்கும் துயரச் சம்பவம் இது. நடந்தது என்ன என்பதை உறுதி செய்ய எங்களது விசாரணை தொடர்கிறது," என்று அவர் கூறினார்.

ஓட்டுநரின் பெயரை போலிசார் வெளியிடாதபோதும் அவரது பெயரையும் சமூக ஊடகப் பக்கங்களில் இருப்பதாகக் கூறப்படும் படங்களையும் பல்வேறு பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.