சுடச் சுடச் செய்திகள்

கே.எஸ்.அழகிரி: செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தால் தமிழர்கள் பாதிக்கப்படுவர்

மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைப்பதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு செய்யக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி இருக்கிறார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமையை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த இந்திய அரசு, மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதனிடையே, இந்திய அரசுக்கு ஆதரவாக மும்பையை மையமாகக் கொண்ட வர்த்தகர் சங்கம் ஒன்று, மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய்யை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து, இந்தோனீசியாவை நாடும்படி தனது உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திரு அழகிரி, “மலேசியாவில் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் பட்சத்தில் அது அங்கு வேலை செய்யும் தமிழர்களைக் கடுமையாகப் பாதிக்கும்,” எனக் கூறியுள்ளார்.

மலேசியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அங்குள்ள உணவகங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 500,000 பேர் வேலை செய்து வருவதாக திரு அழகிரி குறிப்பிட்டார். “அவர்கள் தங்களது ஊதியத்தில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டை தமிழகத்தில் வாழும் தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்பி வருகின்றனர். மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணி வருமானம் கிடைத்துக்கொண்டிருக்கிறது,” என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏறக்குறைய 60 ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது என்ற அவர், மலேசிய மக்கள்தொகையில் இந்தியர்கள் மூன்றாமிடத்தில் உள்ளனர் என்றும் பெரும்பாலும் அங்கு வாழும் தமிழர்களைத்தான் இந்தியர்கள் எனக் கூறுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். “அவர்களில் பெரும்பாலானவர்கள் ரப்பர் தோட்டங்களிலும் செம்பனைத் தோட்டங்களிலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய்யின் அளவைக் கணிசமாகக் குறைத்துவிட்டால் மலேசியத் தமிழர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதலால், வடஇந்திய மனப்பான்மை கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மலேசியா-இந்தியா உறவு பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றும் அவர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இணக்கமான தீர்வு: அன்வார் இந்நிலையில், மலேசியா-இந்தியா இடையே நிலவும் பதற்றநிலைக்கு இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஏனெனில் அது நாட்டின் பொருளியலுக்கு முக்கியமானது என்றும் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். காஷ்மீர் தொடர்பான தமது கருத்துகளைத் திரும்பப் பெற பிரதமர் மகாதீர் முகம்மது மறுத்திருப்பது, மலேசியாவில் உள்ள ஒரு சில குழுக்களின் உணர்வுகளைப் பிரதிநிதிப்பதுபோல் தோன்றுகிறது என்றும் திரு அன்வார் கூறி இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon