தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 12 மலேசியர்களும் நன்கு கவனித்துக்கொள்ளப்படுவதாக அவர்களின் குடும்பத்தினருக்கு மலேசிய போலிஸ் தலைவர் அப்துல் ஹமீத் படோர் உறுதியளித்துள்ளார்.
போலிஸ் விசாரணை தொடர்வதால் கைதோனோரின் குடும்பத்தினர் பொறுமை காக்க வேண்டும் என திரு படோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சந்தேகப் பேர்வழிகளின் குடும்பத்தினருக்காகத் தாம் இரக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
"தீபாவளி நெருங்கி வருவதால் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடவேண்டும் என அவர்கள் நினைக்கலாம். அவர்களுக்காக நான் இரக்கப்படுகிறேன். ஆனால், தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அதிருப்தியில் இருக்கலாம். அது எனக்குப் புரிகிறது. சற்றுப் பொறுமையாக இருங்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் நல்ல முறையில் பார்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர் என நான் உறுதியளிக்கிறேன். கைதானவர்களை அவர்களின் குடும்பத்தினர் பார்த்துச் செல்லலாம். அவர்களை நாங்கள் அனுமதிப்போம்," என்று திரு படோர் கூறியிருக்கிறார்.
கைதான மூவரின் மனைவியர் எனக் கூறப்படும் பெண்கள் மூவர் நேற்று முன்தினம் மலேசிய போலிஸ் தலைமையகமான புக்கிட் அமானுக்குமுன் கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுள் ஒருவர் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜி.சாமிநாதனின் மனைவி என நம்பப்படுகிறது. தங்களது அன்புக்குரியவர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அந்தப் பெண்கள் போலிசை வலியுறுத்தினர்.
"மேல் நடவடிக்கைகளுக்காக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும் பணியை விசாரணைக் குழு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்பின்னரே, இந்த வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதா இல்லையா என்பது தெரியவரும்," என்றும் திரு படோர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கைது செய்யப் பட்டவர்களுள் ஐவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

