தைவானில் கர்ப்பிணி கொலை; காதலரை விடுவித்த ஹாங்காங்

தைவானில் கர்ப்பிணி கொலை; காதலரை விடுவித்த ஹாங்காங்

2 mins read

சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதங்களாகப் போராட்டம் நடந்து வருகிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தைவானில் கொல்லப்பட்டதே அந்த நாடு கடத்தல் மசோதா தாக்கல் செய்யப்பட காரணம். ஏனெனில், நாடு கடத்தல் தொடர்பாக ஹாங்காங் - தைவான் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை.

இந்நிலையில், அக்கொலையைச் செய்ததாகக் கூறப்படும் சான் டோங் கை, 20 (படம்), என்ற ஆடவர் ஹாங்காங் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தைவானில் விடுமுறையைக் கழித்தபோது பூன் ஹியூ விங் என்ற தம் காதலியைக் கொலை செய்ததை சான் ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவரும் ஹாங்காங்வாசிகள்.

"முதலாவதாக, ஹியூ விங்கின் குடும்பத்தாரிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்; வருத்தம் தெரி வித்துக்கொள்கிறேன். எனது செயலால் அவர்கள் மிகுந்த வேதனையையும் பாதிப்பையும் அனுபவித்திருப்பர். நானும் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் சரணடையத் தயாராகவுள்ளேன். தைவானுக்குச் சென்று சட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்," என்று சான் தெரிவித்துள்ளான்.

முன்னதாக, சான் சரணடைவதை ஏற்க முடியாது என்றும் அவர் தங்களது நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் தைவான் தெரிவித்திருந்தது. கொலையுண்டவர் ஹாங்காங்வாசி என்பதால் அக்குற்றத்தைப் புரிந்த சானை ஹாங்காங்கே தண்டிக்கவேண்டும் என தைவான் கூறியிருந்தது. ஆனால், ஹாங்காங் அதை நிராகரித்துவிட்டது.

ஆனால் இப்போது, சானை அழைத்துச் செல்லவும் ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் அதைச் சேகரிக்கவும் ஏதுவாகத் தனது அதிகாரிகள் ஹாங்காங்கிற்குள் நுழைய அனுமதிக்கவேண்டும் என்று தைவான் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கையையும் ஹாங்காங் ஏற்க மறுத்துவிட்டது.

"தைவானின் கோரிக்கை, ஹாங்காங்கின் நீதித்துறை அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. இதை ஒருபோதும் ஏற்பதற்கில்லை," என்று ஹாங்காங் தெரிவித்துள்ளது.

அத்துடன், அந்தக் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் சாட்சியங்களும் தைவானிடமே உள்ளன என்றும் ஹாங்காங் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுவோரை ஹாங்காங்கில் இருந்து சீனாவிற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வகைசெய்யும் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் மசோதா அதிகாரபூர்வமாக நேற்று திரும்பப் பெறப்பட்டது.

ஆயினும், ஆர்ப்பாட்டக்காரர்களின் ஐந்து கோரிக்கைகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதால் எஞ்சியிருக்கும் கோரிக்கைகளுக்கும் அரசு செவிசாய்க்கும் வரை ஹாங்காங்கில் போராட்டம் முடிவுக்கு வராது எனச் சொல்லப்படுகிறது.