ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நேற்று தமது புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார். நாட்டை முன்னெடுத்துச் செல்ல அவர் உறுதி பூண்டுள்ளார். வாடகை கார் நிறுவனமான 'கோஜெக்'கின் இணை நிறுவனர் நதீம் மக்கரிம் உட்பட பலதரப்பிலிருந்து அரசியல் தலைவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தோனீசியாவின் இளம் தொழில்முனைவரான திரு நதீம், கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு அதிபர் தேர்தல்களில் திரு விடோடோவை எதிர்த்து நின்ற முன்னாள் ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ தற்காப்பு அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது திரு விடோடோ ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அவரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய திரு விடோடோ எடுத்திருக்கும் முடிவு, தீவிரவாதப் போக்கிற்கு தனிநபர்கள் ஆளாவதை எதிர்கொள்ள அவரது முனைப்பைக் காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். தமது முன்னாள் அமைச்சரவையில் பணியாற்றிய முல்யானி இந்திராவாத்தியைத் திரு விடோடோ தக்கவைத்துக்கொண்டார்.
திரு சுசிலோ பம்பாங் யுதயோனோ அதிபராக இருந்தபோது திருவாட்டி இந்திராவாத்தி நிதி அமைச்சராக பொறுப்பு வகித்திருந்தார். புதிய அமைச்சரவையில் இடம்பெறும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள், திரு விடோடோவின் முந்தைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

