ஹாங்காங்: ஹாங்காங் தலைவர் கேரி லாம் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியேறிவிடும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் 'ஃபைனான்சியல் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
அதனையடுத்து, ஹாங்காங் தலைவராக யார் பொறுப்பெடுக்கக்கூடும் என்பது பற்றிய ஊகச் செய்திகள் கிளம்பியுள்ளன.
கேரி லாமிற்குப் பதிலாக தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடியவர்கள் குறித்து, ஹாங்காங்கின் நாணய ஆணையத்தின் தலைவர் நோர்மான் சான், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வேட்பாளரான ஹென்றி டாங் உட்பட பல பெயர்கள் அடிபடுகின்றன.
சீனப் பிரதமர் ஸி ஜின்பிங் அதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், இடைக்காலத் தலைவரை பெய்ஜிங் நியமிக்கக்கூடும் என்றும் அடுத்து வருபவர் மார்ச்சில் பதவி ஏற்கலாம் என்றும் அவர் லாமின் மீதி ஆட்சிக் காலத்தைத் தொடரலாம் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. அடுத்த தலைவர் ஹாங்காங்கில் பல மாதங்களாகத் தொடரும் அமைதியின்மையைத் தணிக்க முடியும் என்று பெய்ஜிங்கின் அதிகாரிகள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் அது நிச்சயமற்றது என்று ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது. கேரி லாம் பதவி விலகுவதுடன் ஹாங்காங்கே அதன் தலைவர்களை நியமிக்கவும் தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கும் வகையில் அமைப்பு ரீதியிலான மாற்றத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.

