லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்த பிரெக்சிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்ததையடுத்து, செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குழப்பத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சற்று நேரத்தில் அதற்கு எதிராக வாக்களித்துவிட்டதால் பிரெக்சிட்டை முன்னெடுத்துச் செல்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திரு ஜான்சன் தனது ஒப்பந்தத்திற்கு ஆதரவைப் பெறத் தவறியதால், மூன்று மாதகால நீட்டிப்பு கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கையெழுத்திடவில்லை. நாடாளுமன்றத்தின் பொது அவையில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனவுடன், பிரெக்சிட் காலக்கெடு நீட்டிப்பை அரசு அல்ல, நாடாளுமன்றமே கேட்டுள்ளதாக திரு ஜான்சன் தெரிவித்துவிட்டார்.
பிரிட்டிஷ் எம்பிக்களின் வாக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் பேசிய ஐரோப்பிய மன்றத் தலைவர் டோனல்ட் டஸ்க், பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு இருக்கும் இம்மாதம் 31ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய தலைவர்களுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.
இம்மாதம் 31ஆம் தேதி பிரெக்சிட் காலக்கெடுவுக்கு தாமதம் வழங்கலாமா, அது எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதை இப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பரிசீலிப்பார்கள். நாடாளுமன்றத்தின் தாமதத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டால், திரு ஜான்சன் தேர்தல் நடத்த முடிவெடுக்கக்கூடும் என்று பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

