மகாதீர் பிரதமராக நீடிக்க ஆதரவு தெரிவிக்கும் அம்னோ எம்.பி.க்கள்

மகாதீர் பிரதமராக நீடிக்க ஆதரவு தெரிவிக்கும் அம்னோ எம்.பி.க்கள்

1 mins read
6f517864-28f2-4d1c-952a-70361e1352f9
-

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒரு தவணைக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாற்று வழிகளில் அரசாங்கத்தை அமைக்க செய்யப்படும் முயற்சிகள் பொருளியலுக்கும் இளையர்களுக்கும் எந்தப் பலனையும் அளிக்காது என்று பாயா புசார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு முகமத் ஷஹார் அப்துல்லா கூறியுள்ளார். மக்கள் டாக்டர் மகாதீரின் தலைமையைத் தேர்ந்தெடுத்திருப்பதால் அடுத்த பொதுத் தேர்தல் வரை அவர் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று கோலா கங்சார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு மஸ்தூரா முகமது யாஸித் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நிலைத்தன்மைக்காக டாக்டர் மகாதீர் பிரதமராக இருப்பதற்கு ஜெரான்டட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு அகமது நஸ்லான் இட்ரிஸ், லிப்பிஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு அப்துல் ரஹ்மான் முகமது ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

"டாக்டர் மகாதீரை பதவி விலகுமாறு கோருவதற்கு வலுவான காரணங்கள் இல்லை," என்று மாரான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் கூறியுள்ளார்.

மக்களுக்கு ஏதும் பலனளிக்காத நிலையில் தலைமைத்துவ மாற்றம் பற்றி பக்கத்தான் தொடர்ந்து விவாதிப்பது வீணானது என்று டெங்கரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஆதம் பாபா கூறியுள்ளார். மலேசியாவின் பிரதமராக டாக்டர் மகாதீர் அடுத்த பொதுத்தேர்தல் வரை நீடிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமது அஸ்மின் அலி கூறினார்.