ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் மாதத்துக்குள்ளாகவே அந்நாட்டின் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை எளிமையாக்கும்படி அதிபர் ஜோக்கோ விடோடோ ஆணை பிறப்பித்துள்ளார்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியல் நாடான இந்தோனீசியவில் வேலைகளை உருவாக்குவதே புதிய நிர்வாகத்தின் முன்னுரிமை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று அமைச்சர்களுடனான முதல் சந்திப்பின்போது, அமைச்சர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு, மிகவும் சிக்கலான மத்திய, வட்டார அரசாங்க விதிமுறைகளைக் கண்டுபிடிக்குமாறு அதிபர் ஜோக்கோ கேட்டுக்கொண்டார்.
மக்களுக்குச் சேவைபுரிவதற்கான தடை, வர்த்தக சமூகம் முதலீடு செய்வதற்குத் தடையாக உள்ள விதிமுறைகளை விரைவில் கண்டுபிடித்து அவற்றை மறுஆய்வுக்குட்படுத்த வேண்டும் அல்லது அவை நீக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
"வேலைகளை உருவாக்குவதே நமது ஆகப்பெரிய இலக்கு," என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கச் சந்திப்புகளின்போது அமைச்சர்கள் விவாதங்களில் ஈடுபடலாம் என்றும் பொது இடங்களில் கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் அமைச்சர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

