சிங்கத்திற்குப் பிடரி எப்படியோ, அதுபோல ஆண்களுக்கு மீசையும் தாடியும் என்பது சிலரின் கருத்து. அதற்கும் ஒரு படி மேலாக, சில ஆடவர்கள் தங்களது முகத்தில் வளரும் முடியில் ஆரஞ்சு மை அடித்துக்கொண்டு சிங்கங்களைப் போலத் தோற்றமளிக்க முயல்கின்றனர்.
பங்ளாதேஷில் தாடியை ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிடுவது இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது.
"இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் தாடியின் நிறத்தை ஆரஞ்சுக்கு மாற்றினேன். எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது," என்று ஐம்பது வயது மதிக்கத்தக்க திரு மஹ்புபுல் பாஷார் புன்னகை பூத்த முகத்துடன் ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆரஞ்சு தாடி வைத்திருப்பதால் தாம் மேலும் இளமையுடனும் அழகுடனும் தோற்றமளிப்பதாகத் தமது குடும்பத்தினர் கூறியதாக 60 வயது திரு அப்துல் மியா தெரிவித்தார்.
திருமணக் காலங்களில் மட்டுமின்றி தலைமுடிக்கு வண்ணம் தீட்டுவதற்கும் மருதாணி பங்ளாதேஷில் பயன்படுத்தப்படுகிறது. பங்ளாதேஷிலுள்ள அக்கம்பக்கக் கடைகளில் மருதாணி சுலபமாகக் கிடைப்பதால் இந்தப் புதிய போக்கு அந்நாட்டில் மேலும் பரவலாக உள்ளது.
முகம்மது நபிகளும் தமது தலைமுடிக்கு வண்ணம் பூசினார் என்று சிலர், இஸ்லாமிய வழிநூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர். அதனாலும் அவர்கள் இவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது.

