பிரேசிலிலுள்ள பியாவ்வி நகரில் மருந்தகத்திற்குள் இரண்டு கொள்ளைக்காரர்கள் அத்துமீறி புகுந்து பணத்தைக் கொடுக்குமாறு காசாளரை மிரட்டினர். ஆயினும், அந்தக் கடைக்குள் ஒரு மூதாட்டி பயந்து நின்றதைக் கண்ட கொள்ளைக்காரர்களில் ஒருவர் அவரைச் சமாதானப்படுத்தி விட்டுவைத்தார்.
மூதாட்டி மருந்து வாங்குவதற்காக அந்த மருந்தகத்திற்கு அக்டோபர் 15ஆம் தேதி சென்றிருந்தபோது திடீரென்று ஆயுதம் தாங்கிய இரண்டு கொள்ளைக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர். பணத்தைத் தருமாறு அவ்விருவரும் தன் கடையின் காசாளரை மிரட்டியதாக மருந்தக உரிமையாளர் சாமுவெல் அல்மெடியா கூறியதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்தன. அந்தக் கடையிலிருந்து கொள்ளைக்காரர்கள் மொத்தம் 240 டாலரை அபரகரித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கொள்ளைக்காரர்களைக் கண்ட மூதாட்டி, தமது பணத்தை அவர்களிடம் கொடுக்க முன்வந்தார். ஆனால் அந்தக் கொள்ளைக்காரர்களில் ஒருவர், மூதாட்டிக்கு மரியாதை கொடுத்து, "உங்களிடமிருந்து எனக்குப் பணம் வேண்டாம்," எனத் தெரிவித்ததாக திரு அல்மெடியா கூறினார். அந்தக் கொள்ளைக்காரன் மூதாட்டியின் தோளைத் தட்டிச் சாந்தப்படுத்துவது போலவும் அந்த மூதாட்டியின் நெற்றியில் அவருக்கு முத்தம் கொடுப்பதும் மருந்தகக் கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. அதன் காணொளி தற்போது யுடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொள்ளைக்காரர்களின் அடையாளங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

