பிரதமர் பதவி: அஸ்மின் பகல் கனவு காண்பதாக அன்வார் சாடல்

பிரதமர் பதவி: அஸ்மின் பகல் கனவு காண்பதாக அன்வார் சாடல்

2 mins read

பிரதமராக வேண்டும் என ஒருவர் விரும்புவது குற்றமாகாது என்றும் அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் வரை அது வெறும் கனவாகவே நீடிக்கும் என்றும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் இப்போதைய பிரதமரான மகாதீர் முகம்மது விரைவில் அப்பதவியை திரு அன்வார் வசம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த பொதுத் தேர்தல் வரை டாக்டர் மகாதீரே பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், டாக்டர் மகாதீருக்குப் பின் பிரதமராகப் பொறுப்பேற்க அவர் விரும்புவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில், பிரதமராகலாம் என அஸ்மின் பகல் கனவு காண்கிறார் என திரு அன்வார் மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.

துருக்கிய தொலைக்காட்சியான 'டிஆர்டி'க்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு சொன்னார்.

அப்போது, பிரதமராக வேண்டும் என விரும்புவதாக திரு அஸ்மின் தம்மிடம் ஒருபோதும் கூறியதில்லை என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.

"பிரதமராக வேண்டும் என விரும்புவது குற்றமல்ல. ஆயினும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு வேண்டும். கடந்த வாரம் நடந்த கட்சிக் கூட்டத்தில்கூட, பிரதமர் பதவிக்கு இன்னொருவரின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. சிலர் கனவு காணலாம். ஆனால், டாக்டர் மகாதீருக்குப் பின் நானே பிரதமர் என்பதுதான் உடன்பாடு," என்றார் அவர்.

டாக்டர் மகாதீர் தமது உறுதி மொழியை நிறைவேற்றுவார் என நம்புவதாகக் கூறிய திரு அன்வார், தங்களுக்கு இடையிலான உறவு பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலானது என்றும் அதன் மீது சந்தேகம் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

டாக்டர் மகாதீர் இடையிலேயே பதவி விலகி தாம் அவ்விடத்தில் அமர்வதா அல்லது அவரே பிரதமராகத் தொடர்வாரா என்பதை பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, இனவாதத்தைத் தூண்டிவிட்டு, அதன்மூலம் அரசியலில் ஆதாயமடைய நினைப்பவர்களையும் திரு அன்வார் கடுமையாகச் சாடியுள்ளார். பெரிய அளவில் ஊழல் புரிந்து, மலாய்க்காரர்களை ஏழையாக வைத்திருப்பவர்களே இனத்தைச் சுட்டி அரசியல் செய்கின்றனர் என்றார் அவர்.

ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைத் தான் கொண்டுள்ளதால் அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது என்றும் திரு அன்வார் கூறியுள்ளார்.