நியூயார்க்: உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் பட்டியலில் முதலிடத்தை ‘அமேசான்’ நிறுவனரும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பேஸோஸ் வகித்து வந்தார். அண்மையில் அமேசான் நிறுவனம், பங்குச் சந்தையில் 7 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் இழப்பைச் சந்தித்தது. அமேசான் நிறுவன பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
இதனால் பேஸோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக குறைந்தது. இதையடுத்து, 105.7 பில்லியன் டாலர் சொத்துகளைக் கொண்ட பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். பேஸோஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 24 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில் கேட்ஸ், கடந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தை பேஸோஸ் 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.