டாக்டர் மகாதீர் முகம்மதிற்குப் பிறகு மலேசியாவின் அடுத்த பிரதமராகப் போவது திரு அன்வார் இப்ராஹிம்தான் என்று பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மாற்றப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று எனக் கூறிய திரு முகைதின் , " அடுத்தது யார் என்பதைப் பற்றியது அல்ல, எப்போது பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்பதைப் பற்றியதே. டாக்டர் மகாதீர் எங்கள் தலைவர். எனவே நாம் இந்த மாற்றத்திற்காகக் காத்திருப்போம். அதே நேரத்தில் நாம் நமது பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும்," என்று கூறினார்.
திரு அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்கு பேரில் தாமும் ஒருவர் என்று திரு முகைதின் தெரிவித்தார்.
ஆயினும், இந்த மாற்றத்திற்கான தேதி அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி தமக்கு நினைவு இல்லை என அவர் கூறினார். மலேசியாவின் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நான்கு கட்சிகளுக்கு இடையே ஆழ்ந்த புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, கட்டுப்பாடு ஆகியவை இருப்பதை வெளிக்காட்டுவது அவசியம் என்றும் திரு முகைதின் சொன்னார்.

