பேங்காக்: அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர் உரிமைகளை வழங்க தாய்லாந்து தவறியுள்ளதால் அந்நாட்டின் வர்த்தகச் சலுகைகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த வர்த்தகச் சலுகைகள் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிக்கத்தக்கது.
சலுகை நிறுத்தி வைப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். தாய்லாந்தின் கடல் உணவு மற்றும் கப்பல் துறையில் நீண்டகாலமாக ஊழியர் உரிமை விவகாரங்கள் இருந்து வருவதால் தாய்லாந்தின் கடல் உணவு வகை
களுக்கு இருந்த வர்த்தகச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"வர்த்தகச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படுவதால் பாதிக்கப்படும் பொருட்களின் பட்டியல் தற்போதுதான் எங்கள் கைகளுக்கு வந்துள்ளது.
"வர்த்தகச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய எங்களுக்குக் கூடுதல் நேரம் தேவை," என்று தாய்லாந்தின் வர்த்தக அமைச்சின் வர்த்தகக் கொள்கை அலுவலகத்தின் தலைமை இயக்குநர் பிம்சானோக் வொன்கோர்போன் தெரிவித்தார்.
வர்த்தகச் சலுகைகளின்கீழ் அமெரிக்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கடந்த ஆண்டுக்கான வர்த்தகத்தின் மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு தாய்லாந்து ஏற்றுமதி செய்த பொருட்களின் மொத்த விலை 31.9 பில்லியன் அமெரிக்க டாலர் என புளூம்பர்க் தெரிவித்துள்ளது.
சட்டவிராத மீன்பிடி நடவடிக்கைகள், வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தாய்லாந்துப் பிரதமர் பிராயுட் சான் ஓ சா விதிமுறைகளைக் கடுமையாக்கினார்.
அதையடுத்து, தாய்லாந்தின் 6 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஏற்றுமதித் துறைக்கான செலவினங்களைப் புதிய விதி
முறைகள் அதிகரித்திருப்பதாக நாட்டின் முன்னணி உள்ளூர் வர்ததக அமைப்புகள் புகார் செய்தன.
அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்க தாய்லாந்து போராடி வருகிறது. தாய்லாந்தின் ஏற்றுமதி எதிர்பாராத விதமாகக் கடந்த மாதம் இரண்டாவது மாதமாக சரிந்ததாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

