காணாமற்போன பிள்ளைகளைத் தேடும் வியட்னாமிய குடும்பங்கள்

காணாமற்போன பிள்ளைகளைத் தேடும் வியட்னாமிய குடும்பங்கள்

1 mins read
1f452ae2-90c7-4aa1-8b72-295ada4df84d
-

ஹனோய்: பிரிட்டனில் லண்டனுக்கு அருகே சென்ற வாரம் ஒரு லாரி கொள்கலனில் காணப்பட்ட 39 பேரின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் வியட்னாமைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இ்ந்நிலையில் வியட்னாமில் குறைந்தது 24 குடும்பங்கள் காணாமற்போன தங்கள் பிள்ளைகளைத் தேடி வருவதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ஹா டின், இங்ஹி அன் ஆகிய இரு மாநிலங்களில் காணாமற்போன 14 பிள்ளைகளை குடும்ப உறுப்பினர்கள் தேடி வருவதாக உள்ளூர் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இங்ஹி அன் மாநிலம் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசிக்கும் இடம். அத்துடன் ஆட்கடத்தல் அதிகமாக நடக்கக்கூடிய மாநிலம் அது என்று கூறப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் நியூயென் டின் ஜியா என்பவர், காணமற்போன அவரது 20 வயது மகன் பிரிட்டனில் லாரியில் காணபட்ட 39 பேரின் சடலங்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த லாரியில் காணப்பட்ட சடலங்கள் சீன நாட்டவர்களாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் பிரிட்டிஷ் போலிசார் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது அவர்களில் பெரும்பாலானோர் வியட்னாமியர்கள் போல தெரிகிறது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. சடலங்களை அடையாளம் காண பிரிட்டிஷ் போலிசாருடன் சீனா மற்றும் வியட்னாமிய அதிகாரிகள் அணுக்கமாக ஒத்துழைத்து வருகின்றனர்.

இதற்கிடையே இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு உதவியாக சில ஆவணங்களை வியட்னாமிற்கு பிரிட்டன் அனுப்பியுள்ளதாக வியட்னாமிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.