அஸ்கபாட்: மலேசியாவில் தலைமைத்துவ மாற்றம் எப்போது நிகழும் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் தற்போது வெளிநாடு சென்றுள்ள மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது, பிரதமர் யார் என்பதை பக்கத்தான் ஆட்சி மன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மலேசியாவில் அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை டாக்டர் மகாதீரே பிரதமராக நீடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ள வேளையில் டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறிய அந்த யோசனை அவர்களின் கருத்து என்றும் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி மன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். இரண்டு நாள் பயணமாக துர்க்மேனிஸ்தான் சென்றுள்ள டாக்டர் மகாதீர் அங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
மலேசியாவில் தலைமைத்துவ மாற்றத்திற்கான குறிப்பிட்ட நேரத்தை தம்மால் நிர்ணயிக்க முடியவில்லை என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். மலேசியாவில் சென்ற வாரம் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அம்னோ எம்பிக்கள் 6 பேர் டாக்டர் மகாதீர் அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக நீடிக்க தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
டாக்டர் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் முகம்மது ஷஹார் அப்துல்லா, அப்துல் ரஹ்மான் முகம்மது, அகமது நஸ்லான் இட்ரிஸ், இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் ஆகியோரும் அடங்குவர்.
"நீண்ட காலத்திற்கு பிரதமராக இருக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். ஆனால் எனது கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செய்த தவறுகளை சரி செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன்," என்று டாக்டர் மகாதீர் கூறினார். "அதில் நான் திருப்தி அடைந்த பிறகு பிரதமராக நீடிக்க மாட்டேன். மலேசியா தற்போது பெரிய பிரச்சினையில் உள்ளது. அதற்கு அவ்வளவு எளிதில் நம்மால் தீர்வு காண முடியாது. ஆகவே தலைமைத்துவ மாற்றம் எப்போது என்பதை தம்மால் கூற முடியவில்லை," என்றும் அவர் சொன்னார்.
14வது பொதுத் தேர்தலுக்கு முன்பு பக்கத்தான் உடன்பாட்டின் படி டாக்டர் மகாதீர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அதன் பின்னர் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராஹிமிடம் டாக்டர் மகாதீர் ஒப்படைப்பார் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான குறிப்பிட்ட காலம் தீர்மானிக்கப்படவில்லை.

