'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம்'

'உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம்'

1 mins read
802bc5d2-25db-4520-95b8-2a663c70a969
ஒசாமா பின் லாடன் 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட அல்லது பிடிபட்ட ஆக மூத்த பயங்கரவாதத் தலைவர் 48 வயது அபு பக்கர் அல்-பாக்தாதி. படம்: ராய்ட்டர்ஸ் -

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் மரணம், உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய முன்னேற்றம் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.

அமெரிக்க சிறப்புப் படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) சிரியாவில் நடத்திய அதிரடி நடவடிக்கையின்போது பாக்தாதி கொல்லப்பட்டார்.

பயங்கரவாதம் சிங்கப்பூர் உட்பட உலகெங்கிலும் தொடர்ந்து கடுமயான மிரட்டலாக நிலவி வருவதாக அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

"ஐஎஸ் அமைப்பை முறியடிக்க முற்படும் உலகக் கூட்டணியின் உறுப்பினர் என்ற முறையில், ஐஎஸ் அமைப்பு உட்பட, உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கிறது," என அமைச்சின் பேச்சாளர் அறிக்கையில் குறிப்பிட்டார். சிங்கப்பூர் 2014 நவம்பர் மாதம் இந்தக் கூட்டணியில் சேர்ந்தது.

பாக்தாதியின் மரணத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொலைக்காட்சியில் அறிவித்தார். அமெரிக்கப் படையினர் சுற்றிவளைத்தபோது, வெளியேற வழியில்லாத சுரங்கத்திற்குள் தப்பிச்சென்ற பாக்தாதி, தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.