காதலனை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாக முன்னாள் மாணவி மீது குற்றச்சாட்டு

காதலனை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாக முன்னாள் மாணவி மீது குற்றச்சாட்டு

2 mins read
99cb69db-8c38-465e-a610-c1bff4140d65
அலெக்சாண்டர் உர்டுலாவுடன் (இடது) நட்பாக இருந்த சுமார் 18 மாதங்களில் அவரை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வார்த்தைகளாலும் துன்புறுத்தியதாக அவரது காதலியான இன்யோங்மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர் ரேச்சல் ரோல்லின்ஸ் குற்றம் சாட்டினார். படம்: தி நியூயார்க் டைம்ஸ் -

தன் காதலனை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாக அமெரிக்காவிலுள்ள போஸ்டன் கல்லூரியின் முன்னாள் மாணவி இன்யோங் இயூ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதே கல்லூரியில் படித்த இன்யோங்கின் காதலர் அலெக்சாண்டர் உர்டுலா, பட்டமளிப்பு தினத்தன்று வாகனம் நிறுத்தும் இடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த மே மாதம் 20ஆம் தேதி 22 வயது உர்டுலா பட்டம் பெறுவதைக் காண்பதற்காக அவரது குடும்பத்தார் அன்றைய தினம் போஸ்டனுக்குச் சென்றிருந்தனர். பட்டமளிப்பு விழா காலை 10 மணிக்கு நடைபெற இருந்த நிலையில், அதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக உர்டுலா உயிரை மாய்த்துக்கொண்டார்.

உர்டுலாவுடன் நட்பாக இருந்த சுமார் 18 மாதங்களில் அவரை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வார்த்தைகளாலும் துன்புறுத்தியதாக 21 வயது இன்யோங்மீது அரசுத்தரப்பு வழக்கறிஞர் ரேச்சல் ரோல்லின்ஸ் குற்றம் சாட்டினார்.

உர்டுலா இறந்துபோவதற்கு முன்னதாக அந்த துன்புறுத்தல் மிகவும் அதிகமாக இருந்தது என்று குறிப்பிட்ட ரோல்லின்ஸ், உர்டுலாவுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை அதற்கு ஆதாரமாகக் காட்டினார்.

உர்டுலா இல்லாமல் இருந்தால் அவரது குடும்பமும் தாமும் மிகவும் நன்றாக இருப்போம் என்று இன்யோங் பல முறை குறிப்பிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உர்டுலாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இன்யோங் பலமுறை தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதையும் ரோல்லின்ஸ் சுட்டிக்காட்டினார்.

இன்யோங்கின் பிரதிநிதியைத் தொடர்புகொள்ள தி நியூயார்க் டைம்ஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

உர்டுலா உயிரை மாய்த்துக்கொண்டபோது அந்த வாகனம் நிறுத்துமிடத்தின் கூரையில் இன்யோங் இருந்ததும் உர்டுலா எங்கிருக்கிறார் என்பதை இன்யோங் தமது கைபேசி வாயிலாகப் பலமுறை பின்தொடர்ந்து கண்டறிந்ததும் ஆதாரங்களாகக் காட்டப்பட்டன.

போஸ்டன் கல்லூரியின் பொருளியல் துறையில் பயின்றுவந்த இன்யோங் அடுத்த ஆண்டு பட்டம் பெற இருந்தார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கல்லூரியிலிருந்து விலகினார்.

தற்போது தனது தாயகமான தென்கொரியாவில் அவர் வசிப்பதாக ரோல்லின்ஸ் குறிப்பிட்டார். இன்யோங்கை அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரோல்லின்ஸ் குறிப்பிட்டார்.

உர்டுலா உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு இரண்டு மாதங்களில் இவ்விருவருக்கும் இடையே 75,000 குறுந்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அவற்றில் 47,000 குறுந்தகவல்களை இன்யோங் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.