வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது தாம் கொளுத்திய பட்டாசு மீதே தவறி விழுந்து 25 வயது ஆடவர் மரணம் அடைந்ததால் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய தீபாவளித் திருநாள் துக்கநாளாக மாறிப்போனது.
இந்தச் சம்பவம் ஜோகூரின் கூலாய் நகரில் உள்ள தாமான் முத்தியாரா பகுதியில் நிகழ்ந்தது.
பட்டாசுக்குத் தீ வைத்ததும் அவ்விடத்தைவிட்டு தள்ளிச் செல்ல முயன்ற பி.புவனேஸ்வரன் (படம்) நிலைதடுமாறி பட்டாசின்மீதே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. பலத்த சத்தத்துடன் பட்டாசு வெடித்தது.
திரு புவனேஸ்வரனுக்கு முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் உடனடியாக கூலாய் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்பின், அங்கிருந்து ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு திரு புவனேஸ்வரன் மாற்றப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.
இதனால் திரு புவனேஸ்வரனின் குடும்பத்தார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துபோயினர்.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர் கலகலப்பானவர் எனக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் போலிஸ் விசாரித்து வருகிறது.

