தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2 mins read

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேரில் பத்துப் பேர் மீது நேற்று அந்நாட்டு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது.

மலேசியாவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது, அந்த அமைப்பு தொடர்பான பொருட்களை வைத்து இருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அந்தப் பத்துப் பேருக்கும் பிணை மறுக்கப்பட்டது.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன், 60, காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், 34, மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சந்துரு, 38, ஆகிய மூவர் மீதும் மலாக்கா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஜனநாயக செயல் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவரான ராம்கர்ப்பால் சிங் தலைமையிலான ஐந்து வழக்கறிஞர்கள் அவர்கள் சார்பில் முன்னிலையாகினர்.

அந்த மூவர் மீதான வழக்கு விசாரணை டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல, சிலாங்கூரின் செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் பழைய இரும்பு வியாபாரியான ஏ.கலைமுகிலன், 28, மீது குற்றம் சுமத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான குறுந்தகடு, ஒட்டுவில்லைகளைத் தமது வீட்டில் அவர் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் வி.யோகேஷ், தமது கட்சிக்காரருக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைக் கேட்டதும் நீதிமன்றத்திற்கு வெளியே நின்றிருந்த திரு கலைமுகிலனின் மனைவி, "என் கணவர் ஒன்றும் பயங்கரவாதி இல்லை," எனக் கூறி அழுதார்.

இதனிடையே, தொழில்நுட்பர் எஸ்.அரவிந்தன், 27, டாக்சி ஓட்டுநர் வி.பாலமுருகன், 37, ஆகிய இருவரும் 2014 டிசம்பர் 28ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்ததாக பேராக் கோலா கங்சார் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அத்துடன், பினாங்கில் பாதுகாவலர் எம்.பூமுகன், 29, பண்டகப் பொறுப்பாளர் எஸ்.தங்கராஜ், 26, ஜோகூரில் சட்ட நிறுவனத்தில் பணியாற்றும் எஸ்.தீரன், 38, செப்பாங்கில் ஆசிரியர் சுந்தரம் ரெங்கம், 52, ஆகியோர் மீதும் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.