வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதியின் மரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவுக் கொள்கை வெற்றியைக் கொண்டு வந்துள்ளதாக உலகத் தலைவர்கள் கருதுகின்றனர்.
வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றியதற்கான குற்றச்சாட்டு விசாரணை, அரசியல் குற்றச்சாட்டுகள் எனப் போராடும் ஓர் அதிபர் தனது 2020 மறுதேர்தல் பிரசாரத்திற்கு உதவக்கூடிய வகையிலான முக்கிய வெற்றியைப் பெற்றார் என்பதை ஜனநாயகக் கட்சியினர் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
"துரதிர்ஷ்டவசமாக, இது டிரம்ப்பிற்கு மிகவும் நல்லது. ஏனென்றால் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த அவரது புரிதல் பெரும் கேள்வியை எழுப்பி வரும் நேரத்தில், அவர் பெற்றிருக்கும் இந்த வெற்றி முக்கியமானது," என்று முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு ஆலோ சனை வழங்கும் ஜனநாயகக் கட்சியின் கருத்துக் கணிப்பாளரான செல்வி செலிண்டா லேக் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்தாதி கொல்லப்பட்டது முக்கியமான தருணம். அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றார்.
"இந்த நடவடிக்கைக்கு உதவிய அமெரிக்க நட்பு நாடுகளுக்கு என் வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார் பிரான்ஸ் தற்காப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி.
"அமெரிக்காவிற்கு உதவியது குறித்து துருக்கி பெருமைகொள்கிறது. உலகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது உயிரிழந்த பொதுமக்கள், ராணுவ வீரர்களை நாங்கள் நினைவுகூருகிறோம்," என்று ராய்ட்டர்சுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனின் மூத்த உதவியாளர், பஹ்ரெடின் அல்தூன்.
"அசரத்தக்க சாதனைக்காக அமெரிக்க அதிபரை வாழ்த்துகிறேன். அமெரிக்கா மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் நாடுகளின் பகிரப்பட்ட ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறது," என்றார் அல்தூன்.
"பாக்தாதியின் மரணம் பயங்கர வாதத்திற்கு எதிரான சண்டையில் முக்கிய முன்னேற்றம்.
"ஐஎஸ் அமைப்பை வீழ்த்துவதற் கான அனைத்துலக கூட்டணியின் உறுப்பினராக, உலகளாவிய பயங்கர வாதத்தை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது. மேலும் பயங்கரவாதத்தை சமாளிக்க உலகளாவிய முயற்சிகளுக்கு நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம்," என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மாண்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

