பிலிப்பீன்ஸ் நாட்டின் தென் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திமிக்க நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பிலிப்பீன்ஸ் நாட்டின் தென் பகுதியில் மத்திய மிண்டானாவோவை மையமாகக் கொண்டு, நேற்று காலை இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியதை உணர்ந்து வீடுகள், பள்ளிகளில் இருந்தவர்கள் அவற்றிலிருந்து வெளியே ஓடி தப்பினர்.
உள்ளுர் நேரப்படி காலை 9:04 மணி அளவில் டவாவோ நகருக்கு வடகிழக்கில் 26 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பீன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டடங்களுக்கு வெளியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் அருகே உள்ள மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

