கிழக்கு சீனாவிலுள்ள ஓர் உணவகத்தில் ஒரு மில்லியன் யுவானுக்கும் அதிகமான பணத்தைத் தவறுதலாக செலவு செய்த ஆடவரிடம் அந்த உணவகமே அவரது பணத்தைத் திருப்பிக் கொடுத்தது.
40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், சில நண்பர்களுடன் ஸேஜியாங் மாகாணத்திலுள்ள ஓர் உணவகத்தில் சாப்பிட்ட பிறகு கட்டணம் செலுத்தியபோது இந்தத் தவறு நேர்ந்தது. 100 யுவான் (19.30 வெள்ளி) மட்டும் கட்ட வேண்டிய அந்த ஆடவர், அதற்குப் பதிலாக 1,001,000 யுவான் பணத்தை தமது கைபேசி வழியாகக் கட்டணம் செலுத்தியதாக அந்த செய்தி அறிக்கை குறிப்பிட்டது.
அந்த உணவகக் கிளை திறந்த முதல் நாளில் அந்தக் கட்டணம் கொடுக்கப்பட்டிருந்தது. கடை பணியாளர்களின் வேலைப்பளு மிகவும் அதிகமாக இருந்ததால் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகுதான் இந்த அளவு பணம் கொடுக்கப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். தவற்றை உறுதி செய்த பிறகு அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்குத் திருப்பித் தருவதற்கான ஏற்பாட்டில் கடையினர் மும்முரமாக இறங்கினர்.
"நீண்ட நாட்களுக்கு இந்த வர்த்தகத்தில் இருப்பதால் இந்த வாடிக்கையாளரின் பணத்தை எடுத்து மறைத்து வைத்திருக்க மாட்டோம்," என்று உணவக உரிமையாளர் கூறினார்.

