நில நடுக்கம்; அச்சத்தில் பிலிப்பீன்ஸ் மக்கள்

நில நடுக்கம்; அச்சத்தில் பிலிப்பீன்ஸ் மக்கள்

1 mins read

மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் இன்னமும் நில நடுக்கத்தின் அச்சத்திலிருந்து மீள முடியாத மக்கள் ஊண் உறக்கமின்றி தவித்து வருகின்றனர்.

இதுவரை நில நடுக்கத்தில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 6.6 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் தெற்கு வட்டாரத்தில் உள்ள மிண்டானாவோவின் பல பகுதிகளை உலுக்கியது. இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று பேரிடர் மீட்புக் குழு தெரிவித்தது.

நில நடுக்கத்தில் குறைந்தது 400 பேர் காயம் அடைந்தனர். தலைநகர் மணிலாவுக்குத் தெற்கே 972 கிலோ மீட்டர் தொலைவில் கோடபாடோ மாகாணத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நில நடுக்கத்திற்குப் பிறகு 270 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் பிலிப்பீன்ஸ் எரிமலை, புவியியல் கழகம் தெரிவித்தது.

இதில் 6.1 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நில அதிர்வும் ஏற்பட்டது என்று அது கூறியது.

நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் உறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

நில நடுக்கம் காரணமாக சுமார் 8,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு முகவை தெரிவித்தது.

மிண்டானாவோவில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்னமும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும் நேற்று சில அரசாங்க, வணிக அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின.