இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படும் எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதன்மீது பாரபட்சமின்றி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
"காஷ்மீர் விவகாரத்தில் இந்தி யாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும். அந்த நாடுகள் பாகிஸ்தானின் எதிரிகளாகக் கரு தப்படும்," என்று பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சர் கில்கித் பல்திஸ்தான் அலி அமின் கந்தபூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கடந்த செவ்வாயன்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கில்கித் பேசிய காணொளிப் பதிவை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனியத் தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டது இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
"காஷ்மீர் விவகாரத்தில் இந்தி யாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டால் அதற்கு ஒரு தீர்வு காண போரிடுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. அப்போது இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அந்த நாடுகளை எதிரியாக கருதவில்லை. ஆனால் இந்தியாவிற்கு ஆதரவு அளித்தால் அந்நாடுகளின் மீதும் குண்டுவீசுவோம்," என்றார் கில்கித்.
முன்னதாக ஐநாவில் தனது முதல் உரையை நிகழ்த்திய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம்சாட்டி பேசினார். தொடர்ந்து இந்தியா மீது அணு ஆயுதப் போர் தொடுக்கப்படும் என பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அந்நாட்டு அமைச்சர் உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

