கோலா கங்சார்: வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 256வது கிலோமீட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு நீள்வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கற்காரை தூண்கள் ஒரு கார்மீது விழுந்ததில், அந்தக் காரிலிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஈப்போவைச் சேர்ந்த காரின் ஓட்டுநரான 34 வயது லியோங் வூய் செர் என்பவரும், அவருடன் காரில் பயணித்த 60 வயது சியா கிம் செங் என்பவரும் புதன்கிழமை (அக்டோபர் 30) இரவு 9.30 மணிக்குச் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்ததாகக் கோலா கங்சார் காவல்துறையின் துணை ஆணையர் ரசாலி இப்ராஹிம் தெரிவித்தார்.
காரில் இருந்த மற்ற பயணிகளான 27 வயது மீ யீ, 30 வயது மன் யீ ஆகிய இருவரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவ்விருவரும் திரு சியாவின் மகள்கள் என நம்பப்படுகிறது. நீள்வாகனத்தின் ஓட்டுநரான 41 வயது நுருல் புவாய்டி அமிர், மினோரோ சுரங்கத்திற்குப் பிறகு மேட்டுச்சரிவில் ஓட்டிக்கொண்டிருந்தபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்ததாக நம்பப்படுவதாக துணை ஆணையர் ரசாலி தெரிவித்தார்.
"வாகனத்தின் பிரேக் சரியாக இயங்கவில்லை என நம்புகிறோம். ஓட்டுநர், தனக்கு முன்னாலிருந்த வாகனத்தின்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக, இடதுபக்கமாகச் சடாரென வாகனத்தைத் திருப்பினார்," என்றார் அவர். அப்போது, வாகனத்திலிருந்த 18 கற்காரை தூண்களில் 14 தூண்கள் கீழே விழுந்தன. அவற்றுள் ஒன்று திரு லியோங் ஓட்டிவந்த காரின்மீது விழுந்தது.
இந்த விபத்தில் மொத்தம் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் இரு ஓட்டுநர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. நீள்வாகனத்தின் ஓட்டுநர் உட்பட, மற்ற நால்வர் காயங்களின்றி தப்பினார்கள். நீள்வாகனத்தின் ஓட்டுநர் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் உட்கொள்ளவில்லை என பரிசோதனையின்மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தின் தொடர்பில் போலிசார் அவரைக் கைது செய்தனர்.

