1எம்டிபி: $1 பில்லியன் சமரச முயற்சியில் ஜோ லோ

1எம்டிபி: $1 பில்லியன் சமரச முயற்சியில் ஜோ லோ

2 mins read

வாஷிங்டன்: 1எம்டிபி விவகாரத்தில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிவரும் ஜோ லோ என பிரபலமாக அழைக்கப்படும் லோ டெக் ஜோ என்ற வர்த்தகர் தமக்கு எதிராக உள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்க அமெரிக்க நீதித் துறையிடம் சமரசம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, அவர் அமெரிக்க டாலர் 1 பில்லியனை (ஏறத்தாழ 4.18 ரிங்கிட்) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதை அவர் 1எம்டிபி எனப்படும் மலேசிய சுய ஆதிபத்திய வளர்ச்சி நிதியிலிருந்து கையாடிய பணத்துக்கு ஈடாகக் கொடுக்க முன்வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இது ஊழலுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளின் பயனாக திரும்பப் பெறப்படும் மிகப் பெரிய தொகை என்று கூறப்படுகிறது.

மலேசியாவின் 1எம்டிபி நிதி மோசடியால்அந்நாட்டு அரசாங்கம் 2018ஆம் ஆண்டு தேர்தலில் கவிழ்ந்ததுடன் அமெரிக்க பங்குச் சந்தையை அச்சுறுத்தியதோடல்லாமல் உலகெங்கும் உள்ள நாடுகளில் இதன் தொடர்பிலான விசாரணையை தொடங்கக் காரணமாக விளங்கியது.

இந்த சமரசத் திட்டம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் ஒன்றில் சமர்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

ஊழல் மூலம் பெற்ற பணத்தை திரும்பப் பெறும் அமைப்பு ஒன்றை அமெரிக்கா பத்தாண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய பின் அந்த அமைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

1எம்டிபி நிதியத்திலிருந்து கிட்டத்தட்ட அமெரிக்க டாலர் 4 பில்லியன் வரை மோசடி ஏற்பட காரணமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சமரசத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜோ லோ தொடர்பான வழக்குகளில் தீர்வு ஏற்பட உதவும் என்று கூறப்படுகிறது.

திரு ஜோ லோ கையாடிய பணம் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட விமானம், மாளிகை வீடுகள், வைரங்கள், ஹாலிவுட் படத் தயாரிப்புகள் என செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சமரசத் திட்டம் குற்ற ஒப்புதலின் அடிப்படையிலானது அல்ல என்றும் இதனால் ஜோ லோ எந்தவிதத் தவற்றையும் தான் செய்ததாக ஒப்புக்கொண்டதாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கிரிமினல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஜோ லோ தப்பிக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமரசத் திட்டத்தை வகுக்க உதவி புரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார் ஜோ லோவைப் பிரதிநித்த முன்னாள் நியூ ஜெர்சி மாநில ஆளுநரான கிரிஸ் கிரிஸ்டி. இதற்கிடையே, ஜோ லோவிடமிருந்து திரும்பப் பெறப்படும் 1 பில்லியன் அமெரிக்க டாலரை மலேசியாவிடம் ஒப்படைக்கும்படி மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.