விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: நால்வர் மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: நால்வர் மீது குற்றச்சாட்டு

1 mins read

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் நால்வர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.

அவர்களில் மலாக்காவின் கடேக் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 34 வயது ஜி.சாமிநாதனும் ஒருவர்.

தெரிந்தே விடுதலைப் புலிகளுக்கு ஃபேஸ்புக் மூலம் ஆதரவு தெரிவித்ததாக டாக்சி ஓட்டுநரான 37 வயது வி.பாலமுருகன், 38 வயது எஸ்.தீரன், வர்த்தகரான 28 வயது ஏ.கலைமுகிலன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றத்தை இவர்கள் புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு புலனாய்வு அதிகாரியின் அலுவலகத்திலேயே இம்மாதம் 7, 8ஆம் தேதிகளில் செய்ததாகக் கூறப்படுகிறது.

மாண்டரின் பசிபிக் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக தீரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தற்காக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலா கங்சாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக பாலமுருகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.