ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர் முகமூடி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று பேரணி நடத்தினர்.
ஹெலோவின் எனப்படும் பேய்கள் விழாவைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த பேரணி நடத்தப்பட்டது.
சீன அதிபர் ஸி ஜின்பிங், ஹாங்காங் தலைவர் கேரி லாம் முதலிய அரசியல் தலைவர்களின் முகங்களைக் கொண்ட முகமூடிகளை அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேராட்டத்தில் இறங்கினர்.
இந்த முகமூடிகளை அச்சிட்டு அணிந்துகொள்ள ஏதுவாக பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தோர் அவற்றுக்கான வடிவமைப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
பேரணி கோஸ்வே பேயில் உள்ள விக்டோரியா பார்க்கிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லான் குவாய் ஃபோங் வரை நடைபெறும். பேரணி காரணமாக பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
லான் குவாய் ஃபோங் வட்டாரத்தில் ஆண்டுதோறும் ஹெலோவின் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் சுற்றுப்பயணிகள் ஹாங்காங்கில் வசிக்கும் வெளிநாட்டினர் ஆகியோரிடையே பிரபலமாக இருக்கிறது. முகமூடி அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நேற்று சமூக ஆர்வலர்கள் சிலர் வழக்கு தொடுத்தனர்.
"இது சட்டத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம்," என்று உயர் நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் குவோக் தெரிவித்தார்.

