மணிலா: தென்பிலிப்பீன்சை சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று உலுக்கியது. அதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவானது.
இதில் குறைந்தது ஐந்து பேர் மாண்டதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை பிலிப்பீன்ஸ் நேரப்படி 9 மணிக்கு தென்பிலிப்பீன்சில் உள்ள மிண்டாவ் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மிண்டானாவ் தீவில் உள்ள கிடாபாவான் நகரில் ஹோட்டல் ஒன்றின் நான்கு மாடிகளும் மேல் மாடியில் உள்ள மாடமும் இடிந்து விழுந்தது. ஆனாலும் முழு
கட்டடமும் இடிந்து விழவில்லை.
அந்த ஹோட்டலில் குறைந்தது பத்து பேர் சிக்கியிருப்பதாக பிலிப்பீன்சின் தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் செய்தியாளர் களிடம் தெரிவித்தது.
தாவாவ் நகரை நிலநடுக்கம் உலுக்கியபோது பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அங்குள்ள தமது வீட்டில் இருந்ததாக அவரது உதவியாளர் கூறினார்.
அதிபர் டுட்டர்டேயின் வீட்டுச் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"அதிபர் டுட்டர்டே பாது காப்பாக இருக்கிறார். அவரை அங்கிருந்து வெளியேற்ற அவசியம் இல்லை," என்று திரு கிறிஸ்டஃபர் கோ கூறினார்.

