கடமை தவறா கணேஷுக்கு கார் பரிசு

கடமை தவறா கணேஷுக்கு கார் பரிசு

1 mins read
24930f54-3e69-4d11-a49a-67891c35a19e
திரு கணேஷ் மூர்த்திக்கு (வலது) கார் பரிசளிக்கும் திரு பென்னி ஜேம்ஸ். படம்: ஃபேஸ்புக் / ஐமான் மனான் -

கோலாலம்பூர்: பலனை எதிர்பாராது கடமையைச் செய்பவருக்கு எந்த வகையிலேனும் உரிய பலன் கிடைத்துவிடும் என்பதற்கு விநியோகத் தொழிலைச் செய்துவரும் 26 வயது மலேசியர் திரு கணேஷ் மூர்த்தியே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

திரு கணேஷின் கடும் உழைப்பும் விடாமுயற்சியும் நேர்மையும் அவரின் முதலாளி திரு ஐமான் மனானை மிகவும் கவர்ந்தது. இதையடுத்து, சில வாரங்களுக்குமுன் அவரைப் பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவையிட்டார் திரு ஐமான்.

அதைக் கண்ட திரு பென்னி ஜேம்ஸ் என்ற கொடையாளர், திரு கணேஷுக்கு கார் ஒன்றைப் பரிசளிக்க விரும்பினார். சொன்னபடி கடந்த மாதம் 30ஆம் தேதி, திரு கணேஷைச் சந்தித்த திரு பென்னி, அவருடன் சேர்ந்து முற்பகல் உணவருந்தி, அவருக்கு கார் ஒன்றைப் பரிசளித்தார்.

எதிர்பாராத் தருணத்தில் கிடைத்த இந்த விலையுயர்ந்த பரிசால் திக்குமுக்காடிப் போன திரு கணேஷுக்கு மகிழ்ச்சியில் பேச வார்த்தையே எழவில்லை.

தேவதைபோல் வந்து திரு கணேஷுக்கு மிகச் சிறந்த தீபாவளிப் பரிசு வழங்கிய திரு பென்னிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.