சீனா: ஆட்சிமுறைக்கு எதிரான சவால்களை ஏற்க முடியாது

சீனா: ஆட்சிமுறைக்கு எதிரான சவால்களை ஏற்க முடியாது

2 mins read

பெய்ஜிங்: ஹாங்காங்கில் 'ஒரு நாடு, இரு ஆட்சிமுறை'யின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் எந்தவிதமான நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்று சீனா தெரிவித்துள்ளாது.

சீன கம்யூனிச கட்சி நாடாளுமன்ற நிலைக் குழுவின்கீழ் செயல்படும் அடிப்படைச் சட்டக் குழுவின் தலைவரான திரு ஷென் சுன் யாவ், கட்சியின் உயர்மட்ட அமைப்பில் நடைபெற்ற விவாதங்களுக்குப் பின் இதைத் தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்றுவரும் வேளையில், சீனாவின் தேசிய பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளப்பம் ஆகியவற்றைப் பாதுகாக்க அவர் உறுதி கூறினார்.

எனினும், திரு ஷென் புதிதாக எந்தவிதக் கொள்கை அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி, அதன் உயரதிகாரிகள் ஆகியோர் தேர்வு செய்யப்படும் முறையை ேமம்படுத்தப்போவதாக நேற்று சீனா கூறியது.

மேலும், சீனாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அதன் சட்டக் கட்டமைப்பு ேமம்படுத்தப்படும் என்றும் திரு ஷென் விளக்கினார்.

இதற்கிடையே, ஹாங்காங் மக்களிடையே மேலும் வலுவான தேசிய அடையாள உணர்வை வளர்க்க நாட்டுப்பற்றுக் கல்வி அறிமுகப்படுத்தப்படலாம் என சீனா கோடிகாட்டியுள்ளது.

இதேபோன்ற முயற்சியை ஏழு ஆண்டுகளுக்குமுன் சீனா அறிமுகப்படுத்த முற்பட்டபோது மாணவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது நினைவுகூரத்தக்கது. அந்தத் திட்டத்தை தற்பொழுது சீனா மீண்டும் கையில் எடுத்துள்ளது.

ஹாங்காங் 1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 'ஒரு நாடு, இரு ஆட்சிமுறை' என்ற அடிப்படையில் சீனாவிடம் கைமாறியது. இதன்வழி, சீனாவில் இல்லாத அடிப்படை உரிமைகள் ஹாங்காங் மக்களுக்கு வழங்கப்பட உறுதி கூறப்பட்டது.

ஹாங்காங் மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவ்ிக்கப்பட்ட இந்த அடிப்படை உரிமைகளில் சீனா கைவைப்பதாகக் கூறி கடந்த ஜூன் மாதம் முதல் அங்கு போராட்டங்கள், சில சமயங்களில் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.