அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக ஊழல் தொடர்பான விசாரணையைத் தொடங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் அதிபராக உதவும்படி உக்ரேனை டிரம்ப் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்க நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் பதவியில் இருக்கும்போது குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மூன்றாவது அமெரிக்க அதிபர் என்ற அவமானம் டிரம்ப்புக்கு ஏற்படக்கூடும்.
"இதுதொடர்பாக வழக்கு விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது. இதன்மூலம் அமெரிக்க மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்வர்," என்று அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி கூறினார்.
பதவி நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
டிரம்ப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என 196 நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களித்தனர்.
இதற்கிடையே பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். தமக்கு ஆதரவு வழங்குமாறு குடியரசுக் கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பதவி நீக்க நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த குடியரசுக் கட்சியினர் செயல்பட வேண்டும் என்றார் அதிபர் டிரம்ப்.
அதிபர் டிரம்ப்பின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க அவர் மீது பொய்க் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப்புக்கு விசுவாசமாக இருக்கும் குடியரசுக் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பதவி நீக்க நடவடிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியினருக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அமெரிக்காவின் துணை அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தபோது உக்ரேனிய எரிசக்தி நிறுவனத்துக்குப் பணியாற்றிய அவரது மகன் முறையற்ற வகையில் பணம் ஈட்டியதாகக் கூறி அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என உக்ரேன் அதிபருக்கு டிரம்ப் நெருக்குதல் தந்ததாகக் கூறப்படுகிறது.

