கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி தொடர்பாக மலேசியாவுக்கு ஏறத்தாழ 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க கோல்ட்மன் சேக்ஸ் முன்வந்துள்ளது.
ஆனால் இந்தத் தொகை போதாது என்று கூறி மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அதை ஏற்க மறுத்துவிட்டார்.
மலேசியாவுக்கு கோல்ட்மன் சேக்ஸ் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு தர வேண்டும் என்று மலேசியா கூறி வருகிறது.
எதிர்பார்க்கப்படும் தொகையைவிட வழங்கப்படும் தொகை மிகவும் குறைவு என்று ஃபைநேன்ஷியல் டைம்ஸ் நாளிதழிடம் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
1எம்டிபி மோசடி தொடர்பாக கோல்ட்மன் சேக்ஸ் நிறுவனத்தின் மீதும் அதன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 17 தற்போதைய, முன்னாள் இயக்குநர்கள் மீதும் மலேசியா குற்றம் சுமத்தியுள்ளது.
முதலீட்டாளர்களை கோல்ட்மன் சேக்ஸ் நிறுவனம் பொய்த் தகவல் கொடுத்து திசை திருப்பியதாக மலேசியா குற்றம் சாட்டுகிறது.
"ஏறத்தாழ 2 பில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக எங்களுக்குக் கொடுக்க கோல்ட்மன் சேக்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
"இந்தத் தொகை எங்களுக்கு திருப்திகரமானதாக அமையவில்லை. அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் நியாயமாக நடந்துகொண்டால் 7.5 பில்லியன்தான் வேண்டும் என்று நாங்கள் பிடிவாதமாக இருக்கமாட்டோம்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
இதுகுறித்து கோல்ட்மன் சேக்ஸ் நிறுவனத்திடம் ஃபைநேன்ஷியல் டைம்ஸ் கேள்விகள் எழுப்பியது.
ஆனால் இதுதொடர்பாகப் பேச அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்ட கேள்விகளுக்கும் அது உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
1எம்டிபி முதலீட்டு நிறுவனத்தை 2009ஆம் ஆண்டில் மலேசியாவின் அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் தொடங்கிவைத்தார்.
அதிலிருந்து கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டாலர் கையாடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் தோல்வி அடைய இந்த மோசடி முக்கிய காரணமாக இருந்தது.
இந்த மோசடியில் முக்கிய பங்காற்றியதாக நம்பப்படும் ஜோ லோவுடன் மலேசியா பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவருடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
தாம் எவ்வித குற்றமும் புரியவில்லை என்று ஜோ லோ கூறி வருகிறார். டாக்டர் மகாதீர் பிரதமராக இருக்கும் வரையில் மலேசியாவில் தமக்கு நியாமான வழக்கு விசாரணை கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.
1எம்டிபியிலிருந்து சுருட்டப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஈடாக ஜோ லோவிடமிருந்து சொத்துகளைப் பெற அவர் இணங்கியுள்ளதாக அண்மையில் அமெரிக்காவின் நீதித் துறை கூறியது.
ஜோ லோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைப் பெற மலேசியா விண்ணப்பம் செய்யும் என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

