மாலி ராணுவச் சாவடியில் தாக்குதல்: 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

மாலி ராணுவச் சாவடியில் தாக்குதல்: 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

2 mins read

பமாக்கோ: மாலியில் உள்ள ராணுவச் சாவடியில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 53 ராணுவ வீரர்கள் மாண்டனர். ராணுவச் சாவடியை பயங்கரவாதிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து மேல் விவரங்கள் கொடுக்கப்படவில்லை. மாலியில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் அந்த நாடு இதுவரை காணாத மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான அந்த ராணுவச் சாவடி நைஜர் எல்லைப் பகுதியில் இருப்பதாக மாலி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதலில் அந்தச் சாவடி பெருமளவில் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுமக்களில் ஒருவரும் மாண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவடி அருகில் இருந்த பத்து பேர் உயிர் பிழைத்ததாக மாலியின் தொடர்புத்துறை அமைச்சர் யாயா சங்காரே டுவிட்டரில் பதிவிட்டார்.

"நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆங்காங்கே

சிதறிக்கிடக்கும் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து, அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன," என்று அமைச்சர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியோரை மாலி அரசாங்கம் கடுமையாகச் சாடியது.

"தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். அவ்விடத்தை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தாக்குதல் நடத்தியோரைத் தேடிக் கண்டுபிடிக்கவும் அவர்கள் அங்கு சென்றுள்ளனர்," என்று மாலி அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த மாதம் புர்கினா ஃபாசோவுடனான எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 40 மாலி ராணுவ வீரர்கள் மாண்டதாக மாலி அரசாங்கம் தகவல் வெளியிட்டது.

ஆனால் மேலும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மாலித் தலைநகர் பாமாக்கோவில் உள்ள ராணுவ முகாமுக்கு வெளியே போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அண்மையில் மாலியில் ராணுவ வீரர்களுக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்து போரிடும் போராளிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

போராளிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் மாலியின் ராணுவ வீரர்கள் திண்டாடுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.