அறிக்கை: சராசரி மலேசியருக்கு சம்பளம் போதவில்லை

அறிக்கை: சராசரி மலேசியருக்கு சம்பளம் போதவில்லை

2 mins read

மலேசியர்களுக்குத் தரப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்று இம்மாதம் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.

மலேசியர்களின் சம்பளம் தொடர்பில் நடத்தப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதன்படி மலேசியர்களின் இடைநிலை சம்பளம் 2,308 ரிங்கிட் என்றும் சராசரி சம்பளம் 3,087 ரிங்கிட் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வருமானம் ஈட்டிய ஊழியர்களின் சென்ற ஆண்டு எண்ணிக்கை மொத்தம் 8.8 மில்லியன்.

ஒரு நாளில் குறைந்தது ஆறு மணிநேரத்திற்கு வேலை செய்பவர் அல்லது ஒரு மாதத்தில் குறைந்தது 20 நாட்களுக்கு வேலை செய்பவர் என்ற தகுதியைப் பெற்ற மலேசியர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

இதில் குறிப்பாக கிராமப்புறத்தார் ஈட்டும் வருமானம் நகர்ப்புறத்தாரை விட குறைவாக உள்ளது.

நகர்ப்புறத்து ஊழியர்களுக்குச் சராசரியாக 3,274 ரிங்கிட் தரப்படுகிறது. ஆனால் கிராமப்புற ஊழியர்களுக்குச் சராசரியாக 2,083 ரிங்கிட் அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.

ஓர் ஏற்புடைய குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்திற்கு தேவையான வருமானத்தை வாழ்வதற்குத் தேவையான சம்பளம் என்று குறிப்பிடுவர். இதன்படி ஒரு மலேசியர் சமுதாயத்தில் அங்கம் வகிக்கவும் தனிப்பட்ட மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கு வாய்ப்பு பெறவும் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கவும் வேண்டும்.

இதற்கிடையே மிகக் குறைந்த சம்பளம் தரப்படுவதிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க, அரசாங்கம் விதித்துள்ள தொகை, குறைந்தபட்ச ஊதியம் என்று கூறப்படுகிறது.

ஆண்டு அடிப்படையில் ஊழியர்களின் இடைநிலை, சராசரி சம்பளம் கிட்டத்தட்ட 6.6% முதல் 7% அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும் அன்றாடச் செலவுகளும் அதிகரித்துள்ளதால், பொருள் வாங்கும் ஆற்றல் அதிகரித்ததாகத் தெரியவில்லை என்று மலேசிய மக்கள் தெரிவித்துள்ளனர்.