இம்ரான் கான் அரசாங்கம் பதவி விலக நெருக்குதல்

இம்ரான் கான் அரசாங்கம் பதவி விலக நெருக்குதல்

2 mins read
eee8aa4b-f7e8-4df5-85d4-f005e3141532
இஸ்லாமாபாத்தில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு ஆகும் நிலையில் அந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது.

இம்மாதம் 3ஆம் தேதிக்குள் இம்ரான் கான் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமாபாத்தில் நடந்த மிகப் பெரிய பேரணியில் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உட்பட சுமார் 35,000 பேர் கலந்துகொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான் கான் அரசாங்கத்திற்கு அந்நாட்டு ராணுவம் அதன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தில் ராணுவம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் இதனால் தங்கள் ஆதரவு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே என்றும் ராணுவப் பேச்சாளர் அசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ராணுவம் பாரபட்சமாக நடந்துகொள்ளக்கூடாது என்றும் அரசியலில் தலையிடுவதை ராணுவம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இம்ரான் கானின் அரசாங்கம் ஆட்சி செய்ய தகுதியற்றது என்றும் ராணுவம் அதற்கு துணை போகிறது என்றும் கூறும் எதிர்க்கட்சிகள் அரசாங்கமும் இம்ரான் கானும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை ராணுவம் மறுத்துள்ளது. பிரதமர் இம்ரான் கானும் பதவி விலக மறுத்து வருகிறார். இம்ரான் கான் பதவி விலகாவிட்டால் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நீடிக்கும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதனால் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படு்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் கையாளுமாறு அரசாங்கத்தை ராணுவத் தலைவர் ஜெனரல் பஜ்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் நீடிக்கும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களால் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அரசாங்கம் கவலைப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.