ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைக்காகப் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையிலான மோதலில் சிலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து நீடிக்கும் ஆர்ப்பாட்டத்தினால் ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகள் போர்க்களம் போல காட்சி அளிக்கின்றன.
டைகூ ஷிங் புறநகர்ப்பகுதியிலுள்ள சிட்டிபிளாஸா கடைத்தொகுதியில் மனிதச் சங்கிலியாகக் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், போலிசாரை எதிர்கொண்டு வாசகங்களை முழங்கத் தொடங்கினர். கடைத்தொகுதியின் உணவகம் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கிறுக்கி எழுத ஆரம்பித்ததாக போலிஸ் தரப்பினர் கூறினர்.
பின்னர் அந்தக் கடைத்தொகுதிக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருக்கும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான (local pro-democracy councillor) ஆண்ட்ரூ சியூவின் காதின் ஒரு பகுதியை ஒருவர் கடித்து எடுத்தார். கத்தியை வைத்திருந்த அந்நபர், மேலும் பலரை அந்தக் கத்தியால் தாக்கி வெட்டுக்காயங்களை ஏற்படுத்தினார்.
இந்தக் கத்திக்குத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட தாக்குதல்காரன் சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மாண்டரின் மொழியில் பேசியதால் அவர் கேண்டனிஸ் மொழியை அதிகம் பயன்படுத்தும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர் அல்ல என ஊகிக்கப்படுகிறது.