மகாதீர்: அடுத்து அன்வார்தான், அஸ்மின் அல்ல

மகாதீர்: அடுத்து அன்வார்தான், அஸ்மின் அல்ல

1 mins read
07c60053-c5f0-4177-b335-ac33bdfbbdb7
-

தனக்குப் பிறகு பதவிக்கு வர இருப்பவர் திரு அன்வார் இப்ராஹிம்தான் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது மீண்டும் மறு உறுதி செய்திருக்கிறார். தற்போதைய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்படமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தல் வரை டாக்டர் மகாதீர் பதவியில் இருக்க சில தரப்புகளிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், தாம் அதற்கு முன்பாகவே வெளியேறுவதில் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், திரு அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கப்போவதாக டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். 35ஆம் ஆசியான் உச்சநிலை சந்திப்பில் கலந்துகொள்ள பேங்காக் சென்றுள்ள அவர், "இது இரண்டு ஆண்டுகளில் நடக்குமா அல்லது மூன்று ஆண்டுகளில் நடக்குமா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. இருந்தாலும் கொடுத்த வாக்குறுதியின்படி நான் பதவி விலகுவேன்," என்றார்.

இருந்தபோதும் எப்போதைக்குள் இது நடைபெறும் என்பதை டாக்டர் மகாதீர் கூற மறுத்துள்ளார். கால வரையறையை உறுதி செய்ய அவர் தொடர்ந்து மறுப்பதால், ஒருவேளை தனது வாக்குறுதிக்குப் புறம்பாக அவர் நடந்துகொள்ளக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.