'இந்தியா விலகினாலும் வர்த்தக உடன்பாடு அமலுக்கு வரும்'

'இந்தியா விலகினாலும் வர்த்தக உடன்பாடு அமலுக்கு வரும்'

2 mins read
2bfc2372-1361-44e7-a9dd-7f312bc08fb4
பேங்காக்கில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ரோசை வரவேற்ற தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஒச்சா. நேற்று முன்தினம் இரு தலைவர்களும் வட்டாரப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்காக்: கடைசி நிமிடத்தில் இந்தியா சில சந்தேகங்களை எழுப்பி பின்வாங்கியதால் ஆசியான்-பரந்த அளவிலான உடன்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

இருப்பினும் உலகின் ஆகப்பெரிய வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை ஆக்ககரமாக அமைந்தது என்றும் பின்னேரத்தில் உடன்பாடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் 16வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்தும் தாய்லாந்து கூறியுள்ளது.

சீனா ஆதரவிலான 16 நாடுகளை உள்ளடக்கிய முழுமையான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அெமரிக்க- சீன வர்த்தகப் போரினால் பொருளியல் மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் உலகப் பொருளியலுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் அடுத்த ஆண்டில் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியானுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். அதே சமயத்தில் ஆசியான் கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க பேராளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதை வட்டார நாடுகள் சுட்டிக் காட்டின.

இந்த நிலையில் உலகின் பாதி மக்கள் தொகையையும் உலகின் மூன்றில் ஒரு பகுதி உள்நாட்டு உற்பத்தியையும் கொண்ட 16 நாடுகளின் வர்த்தக உடன்பாட்டில் தற்காலிகமாக இணக்கம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டில் பத்து ஆசியான் நாடுகளும் சீனா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

"முந்தைய நாள் இரவு நடை பெற்ற பேச்சு ஆக்ககரமாக இருந் தது," என்று தாய்லாந்து வர்த்தக அமைச்சர் ஜுரின் லக்சனா விசிட் தெரிவித்தார்.

வெற்றிகரமான பேச்சு குறித்து பின்னேரத்தில் அறிவிக்கப்படும். இந்தியாவும் பங்கேற்றுள்ளதால் கூட்டு அறிக்கையாக வெளியிடப்படும். அடுத்த ஆண்டில் உடன்பாடு கையெழுத்தாகும் என்று அவர் கூறினார்.

ஆனால் பேச்சுவார்த்தை பற்றி நன்கு அறிந்த இந்திய அதிகாரி ஒருவர், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை என்றார்.

"பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லாமே அரசியல் ரீதியாக நிர்ணயிக்கப்படும்," என்று அவர் சொன்னார்.