கேரி லாமுக்கு ஆதரவு: சீன அதிபர் ஸி மறுவுறுதி

கேரி லாமுக்கு ஆதரவு: சீன அதிபர் ஸி மறுவுறுதி

2 mins read
70cbc303-b236-4e93-b429-e053c8be7042
ஷங்ஹாயில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுடன் கைகுலுக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங். படம்: ஏஎஃப்பி -

ஷங்ஹாய்: ஹாங்காங்கை கடந்த நான்கு மாதங்களாக உலுக்கி வரும் ஆர்ப்பாட்டங்கள் அதன் அரசியல் நிலைத்தன்மையைக் கேள்விக்குரியதாக்கி உள்ளன.

இதனால் அதன் நிர்வாகத் தலைவரான கேரி லாம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை சீன அதிபர் ஸி ஜின் பிங் மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.

சீன நகரான ஷங்காயில் கேரி லாமை அவர் சந்தித்தபோது தமது இந்த ஆதரவை அவர் மறுவுறுதிப்படுத்தியதாக அதிகாரபூர்வ சீன செய்தி நிறுவனமான சின் ஹுவா தெரிவித்தது. அங்கு சென்ற திருவாட்டி கேரி லாம் ஹாங்காங் நிலவரம் குறித்து திரு ஸிக்கு விளக்கமளித்ததாக நம்பப்படுகிறது.

சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியின் ஓர் அங்கமாக விளங்கும் ஹாங்காங்கில் கடந்த 22 வாரங்களாக பரந்த அளவிலான ஜனநாயக நடைமுறைகள் அங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

திருவாட்டி கேரி லாம் ஹாங்காங் நகரை நிர்வகிக்கும் முறை குறித்து குறைகூறல்கள் ஏதும் இருக்குமாயின் அது பற்றி திரு ஸி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும், ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு இைடயில் அவர், "சிறப்பு நிர்வாகப் பகுதியின் வழி

நடத்துவதிலும் அங்கு நிலைத்தன்மையைக் கொண்டுவருவதிலும் உங்கள் கடமைகளை நீங்கள் கவனமுடன் ஆற்றியிருக்கிறீர்கள்.

"சீனாவின் மத்திய தலைமைக்கு உங்கள் மீது பெருமளவு நம்பிக்கை உள்ளது என்பதுடன் உங்களது பணி, உங்களுக்கு கீழ் பணியாற்றும் நிர்வாகக் குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது.

"ஹாங்காங்கில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவது தற்போதைய நிலையில் தலையாய கடமை," என்று கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயம், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கடுைமயான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என நினைவுறுத்திய திரு ஸி, "சட்டத்தின் நடைமுறைகளின்படி, வன்முறையை முடிவுக்குக் கொண்டு

வருவதுடன் குற்றம் புரிவோர் தண்டிக்கப்பட வேண்டும்," என்றும் கூறினார்.

ஹாங்காங் நிர்வாக அதிகாரியாக திருவாட்டி கேரி லாம் தொடர்வது திரு ஸியைப் பொறுத்தது என்று கூறப்படும் நிலையில், திரு ஸி வெளிப்படையாக திருவாட்டி லாமுக்கு ஆதரவளித்திருப்பது காலப்போக்கில் திருவாட்டி லாம் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.