வாஷிங்டன்: பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக வெப்பமயமாதல் என்ற பிரச்சினை, பயங்கரவாதம் போன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பிரான்சில் உள்ள போர்கேட் நகரில் 2015ஆம் ஆண்டு இறுதியில் உச்சநிலை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து, புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக விளங்கிய 'கிரீன் ஹவுஸ் கேஸ்' என்னும் வாயுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் நியூயார்க் நகரில் அனைத்துலக மாநாடு நடந்தது.
இதில் 'பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை' என்ற பெயரில் ஓர் உடன்படிக்கை உருவானது. இதில், உலகளவில் 56 விழுக்காட்டுக்கும் அதிகமான 'கிரீன் ஹவுஸ் கேஸ்' வாயுவின் வெளியேற்றத்துக்கு காரணமான 72 நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டன.
கையெழுத்திட்ட நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள், இதை முறைப்படி ஏற்று இது தொடர்பான ஆவணங்களை ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தன. இதன் காரணமாக பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை 2016ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வந்தது. திரு பராக் ஒபாமா அப்போது அமெரிக்க அதிபராக பதவியிலிருந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இதனால், நியாயமற்ற முறையில் அமெரிக்காவுக்கு பெருமளவிலான பொருளியல் சுமை ஏற்படுவதால் இனியும் இதில் நீடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்க அரசு சமர்ப்பித்துள்ளது. இந்த முடிவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ, இந்த விலகல் ஓராண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.

