கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து இந்தோனீசியாவின் கோஜெக் நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமான 'டெகோ ரைட்'டும் வாடகை மோட்டார்சைக்கிள் சேவை வழங்க மலேசியாவில் அனுமதிக்கப்படும். ஆறு மாத காலத்துக்குப் பரிட்சார்த்த அடிப்படையில் அச்சேவை வழங்கப்படும் என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் நேற்று கூறினார்.
"முழுமையான பொதுப் போக்குவரத்து முறையில் வாடகை மோட்டார்சைக்கிள் சேவைக்கும் முக்கிய இடமுண்டு. அது பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு இணைப்புச் சேவையாக விளங்கும்", என்று நாடாளுமன்றத்தில் திரு லோக் கூறினார். அது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்படுகிறது. அந்தப் பகுதியில்தான் மலேசியத் தலைநகரம் கோலாலம்பூர் அமைந்துள்ளது.
தேவையின் அடிப்படையில் அதை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது பற்றி ஆராயப்படும் என்றார் அவர். வாடகை மோட்டார்சைக்கிள் சேவை வழங்கப்படுவதற்கான சட்ட திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியச் சந்தைக்குள் கோஜெக் நிறுவனத்தின் வருகை, அங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் கிராப் நிறுவனத்திற்குக் கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

